திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.106 திருவலஞ்சுழி
பண் - பழம்பஞ்சுரம்
பள்ளம தாய படர்சடைமேற் பயிலுந் திரைக்கங்கை
வெள்ளம தார விரும்பிநின்ற விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்தி
உள்ளம் உருக உணருமின்கள் உறுநோ யடையாவே.
1
காரணி வெள்ளை மதியஞ்சூடிக் கமழ்புன் சடைதன்மேற்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந் தழையந் நுழைவித்து
வாரணி கொங்கை நல்லாள்தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த உவகை அறியோமே.
2
பொன்னிய லுந்திரு மேனிதன்மேற் புரிநூல் பொலிவித்து
மின்னிய லுஞ்சடை தாழவேழ உரிபோர்த் தரவாட
மன்னிய மாமறை யோர்கள்போற்றும் வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க் குயர்வாம் பிணிபோமே.
3
விடையொரு பாலொரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பாலொரு பாலிடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால்சிலம்பு நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடை யாதசெய்யுஞ் செய்கை அறியோமே.
4
கையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்
பையம ரும்மர வாடஆடும் படர்சடை யார்க்கிடமாம்
மையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே.
5
தண்டொடு சூலந் தழையவேந்தித் தைய லொருபாகங்
கண்டிடு பெய்பலி பேணிநாணார் கரியின் உரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற தொடர்பைத் தொடர்வோமே.
6
கல்லிய லும்மலை யங்கைநீங்க வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதில் மூன்றும்செற்ற சுடரான் இடர்நீங்க
மல்லிய லுந்திரள் தோளெம்மாதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கிஏத்தி யிருப்பவர் புண்ணியரே.
7
வெஞ்சின வாளரக் கன்வரையை விறலா லெடுத்தான்றோள்
அஞ்சுமோ ராறிரு நான்குமொன்றும் அடர்த்தார் அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதரென்றும் நணுகும் இடம்போலும்
மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும் வலஞ்சுழி மாநகரே.
8
ஏடியல் நான்முக கன்சீர்நெடுமா லெனநின் றவர்காணார்
கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த குழகர் உலகேத்த
வாடிய வெண்டலை கையிலேந்தி வலஞ்சுழி மேயஎம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யுஞ் சரிதை பலபலவே.
9
குண்டரும் புத்தருங் கூறையின்றிக் குழுவார் உரைநீத்துத்
தொண்டருந் தன்றொழில் பேணநின்ற கழலான் அழலாடி
வண்டம ரும்பொழில் மல்குபொன்னி வலஞ்சுழி வாணன்எம்மான்
பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற பரிசே பகர்வோமே.
10
வாழியெம் மானெனக் கெந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன கருத்தின் தமிழ்மாலை
ஆழியிவ் வையகத் தேத்தவல்லார் அவர்க்குந் தமருக்கும்
ஊழி யொருபெரும் இன்பமோக்கும் உருவும் உயர்வாமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com